search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலை கொட்டி"

    குமுளி மலைச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ தொலைவிற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தற்காலிக தடுப்புகளான மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டன.

    எனவே சீரமைப்புக்காக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடைவிதித்தனர். குமுளி பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி மற்றும் டீக்கடைகளுக்கு கூடலூரில் இருந்து பால் கொண்டு செல்லப்படுகிறது.

    வழக்கம்போல் பாலை ஏற்றிக்கொண்டு வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் குமுளி நோக்கி மலைச்சாலையில் சென்றனர். லோயர்கேம்ப் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்தியாவசிய பொருளான பால் கொண்டு செல்ல அனுமதிக்கவேண்டும் என வியாபாரிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் அனுமதி மறுக்கப்பட்டதால் கொண்டு வந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உயர்அதிகாரிகள் உத்தரவின்பேரில் குமுளி மலைச்சாலையில் செல்ல மோட்டார் சைக்கிளை மட்டும் அனுமதித்தனர். இதனைதொடர்ந்து கேரள பகுதிக்கு பால் கொண்டு செல்லப்பட்டது.

    ×